இறையன்பு:
சுரண்டல்களின் வரலாறு
சுப்ரபாரதிமணியனின் “ முறிவு” நாவலை முன் வைத்து..
( முறிவு என்சிபிஎச் பதிப்பகம் வெளியீடு )
மனிதன் வேட்டையாடும்வரை சமத்துவ சமூகம் இருந்த்து. வேளாண்மைக்குச் சென்றபோதே ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுவிட்டன. உட்கார்ந்து கொழுக்கிற ஒரு கூட்டமும், உழைத்து இளைக்கிற மக்களும் உருவாகிவிட்டார்கள். மேட்டுக்குடியினர் உல்லாசமாக இருந்து அடுத்தவர்களுடைய உழைப்பைச் சுரண்டத் தொடங்கிவிட்டார்கள் என்கிற பார்வையை மார்க்சிய அறிஞர்கள் கூறவில்லை. மாறாக, யுவல் நோவா ஹராரி, ஜேரட் டயமண்ட் போன்ற மானுடவியலாளர்கள் முன்வைக்கிறார்கள். வேட்டையாடும்போது மனிதன் ஆஜானுபாகுவாக இருந்தான். அவன் உணவில் விதவிதமான உணவுப்பொருட்கள் இடம்பெற்றிருந்தன. வேளாண்மைக்கு மாறிய பிறகு குறைந்தபட்ச தானியங்களும் காய்கறிகளுமே இடம்பெறுகின்றன என்பதையும், மனிதன் குறுகிப்போனான் என்பதையும் அவர்கள் முன்வைக்கிறார்கள்.
செல்வத்தைச் சேர்ப்பது என்பது உழைப்பின் திரட்சியாக இருப்பதைவிட சுரண்டலின் நீட்சியாக இருக்கிறது என்பதைத்தான் பொதுவுடைமைக்காரர்கள் முன்வைத்தார்கள். பெரிய முதலாளிகள் மட்டும்தான் சுரண்ட வேண்டுமென்பதில்லை. காஞ்சியில் பணியாற்றுகின்றபோது இரண்டு, மூன்று தறிகள் வைத்திருப்பவர்கள்கூட 10,000 ரூபாய், 15,000 ரூபாய் கொடுத்துவிட்டு பச்சிளம் பாலகர்களைத் தறியில் வேலைசெய்ய வைத்ததையும், அந்தக் குழந்தைகள் பரிதாபமாகப் பலவித நோய்களுக்கு ஆளானதையும் பார்க்க நேர்ந்தது. பிறகு அவர்களை விடுவித்துப் பள்ளியில் சேர்த்தோம்.
சுரண்டுவது மனிதனுக்கு மட்டுமே சொந்தமானது என்பது அல்ல. தேனீக்கள்கூட அடுத்த தேன்கூட்டில் திருட முனைகின்றன. ஒருமுறை குஜராத்தில் துவாரகையில் கடற்காகங்கள் பறப்பதைப் பார்த்தோம். அங்கே ஒருவர் தின்பண்டங்களை அந்தக் காகங்களுக்குப் போட்டார். நதி நிறைய நீர் ஓடுகிற கரையில்தான் கிருஷ்ணர் இறந்ததாகக் கூறப்படுகின்ற இடம் இருந்தது. நதியில் மீன்கள் ஓடினாலும் அவற்றைப் பிடிப்பதற்குக்கூட முயற்சியெடுக்காமல் அந்தத் தின்பண்டத்தை கடற்காகங்கள் போட்டி போட்டுக்கொண்டு சாப்பிட்டன. ஆஸ்திரேலிய கடற்கரைகளில் மக்கள் தின்பண்டத்தை வைத்துக்கொண்டு அமர்ந்தால் கடற்காகங்கள் பிடுங்கித் தின்றுவிடும்.
மனித சுதந்தரத்தைப் பறிக்கிற எந்த நிகழ்வும் சுரண்டல்தான். ‘வேறெங்கும் பணிக்குச் செல்லக் கூடாது, எங்களிடம் மட்டும்தான் பணியாற்ற வேண்டும்‘ என்கிற நிபந்தனையை விதைத்து ஒருவருடைய நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதும் சுரண்டல்தான். சிறைச்சாலையை எண்ணி மக்கள் அச்சப்படுவதற்குக் காரணம் வெளி உலகத்தில் சுதந்தரமாக நடமாடி மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லை என்பதுதான். மிகச் சிறந்த உணவைத் தந்தால்கூட யாரும் சிறைச்சாலையிலிருக்க விரும்ப மாட்டார்கள். மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகள்கூட கூண்டிலே அடைபட்டுவளர்ப்பவர்கள் தருகிற சுவையான உணவை உண்ண விரும்புவதில்லை. அதனால்தான் பாரதிதாசன் ‘அக்கா அக்கா என்று நீ அழைத்தால் சுக்கா மிளகா சுதந்தரம் கிளியே‘ என்று எழுதினார்.
இன்றும் எண்ணற்ற குழந்தைகள் உலகமெங்கும் குழந்தைத் தொழிலாளர்களாகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது செய்தித்தாள்களில் கொத்தடிமைகளாக இருப்பவர்கள் செங்கற்சூளையிலும், அரிசி ஆலையிலும் விடுவிக்கப்பட்டதாகப் படித்துக்கொண்டிருக்கிறோம்.
ஒருவருடைய உழைப்பைக் கட்டுப்படுத்துவதற்குப் பல வழிகள் இருக்கின்றன. இளம் பெண்கள் எப்படியெல்லாம் நூற்பாலைகளில், துணியாலைகளில் கடுமையாக உழைக்கிறார்கள் என்பதையும், அவர்களுடைய உடல்நலம் எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் மிக நேர்த்தியாக – அதே அநேரத்தில் பூடகமாக – சொல்லுகிற நூலாக ‘முறிவு‘ என்கிற குறுநாவல் மலர்ந்திருக்கிறது.
நூலின் ஆசிரியர் சுப்ரபாரதிமணியன் திருப்பூரில் வாழ்பவர். திருப்பூருக்குச் செல்கிறபோதெல்லாம் அவர் ஊரிலிருந்தால் அவரை அவசியம் நான் சந்திப்பதுண்டு. அதிகம் பேசாமல் இயங்கும் தன்மை உள்ளவர் அவர். திருப்பூரில் வாழ்வதால் சுற்றுவட்டாரத்திலிருக்கிற பல பிரச்சினைகளைத் தன்னுடைய புனைவுகளில் கொண்டுவருபவர். சுற்றுச்சூழல்மீது மிகுந்த அக்கறையோடு பேசுபவர். அவருடைய நாவல்கள் அனைத்துமே சமூகத்தையும், அது ஏற்படுத்தும் அகவயப் பிரச்சினையையும் மையமாக வைத்து எழுதப்படுபவை. வெளிநாட்டிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் வருகிற பணியாளர்களின் தாக்கத்தையும், அது உண்டாக்கும் சிக்கல்களையும் நேர்த்தியாக எழுதியிருப்பார்.
சுப்ரபாரதிமணியன் ‘கனவு‘ என்கிற இலக்கிய இதழை 38 ஆண்டுகளாக நடத்தி வருபவர். இதுவரை அவர் 120 நூல்களை எழுதியிருக்கிறார். அவற்றில் 27 நாவல்களும் அடங்கும். ‘கதா விருது‘ பெற்றவர். தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின்கீழ் வழங்குகிற சிறந்த நாவல்களுக்கான விருது, தமிழ்ச் செம்மல் விருது, மொழிபெயர்ப்பாளர் விருது போன்ற விருதுகளையும் பெற்றிருக்கிறார். 2020ஆம் ஆண்டு சிறந்த நாவலுக்கான விருதையும், சார்ஜா புத்தகக் கண்காட்சியின் புக்கிஷ் விருதையும் பெற்றிருக்கிறார். ‘சிலுவை‘ என்கிற இவருடைய நாவல் புதுமைப்பித்தன் விருதைப் பெற்றிருக்கிறது. இவருடைய பத்துச் சிறுகதைகள் குறும்படங்களாகியிருக்கின்றன. இவரின் இயக்கத்தில் வந்த குறும்படம் ‘நாணல்.‘
திருப்பூர் தமிழ்ச் சங்கத்திலும் முக்கியப் பங்காற்றிக்கொண்டு வருகிறார். முறிவு நாவல் அவலச்சுவை கொண்டதாக இருந்தாலும், படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியாத வாழ்க்கைச் சித்திரம்.
கோவை ஞானி மிகப் பெரிய படிப்பாளி. அவர் அணிந்துரையில் நம் காலத்து நாவல்களில் நாயகர்கள் இல்லை என்றும், மனிதர்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்றும் குறிப்பிடுகிறார். தமிழறிஞர் மு.வ. ‘தற்சமயம் காவியங்கள் தோன்ற வாய்ப்பே இல்லை. ஏனென்றால் ஒப்பில்லாத மனிதராக ஒருவரை ஒத்துக்கொள்ளவே யாரும் தயாராக இல்லை‘ என்று இலக்கிய மரபு என்கிற நூலில் கூறுகிறார்.
பஞ்சாலைகளில் நிலவுகிற சுமங்கலித் திட்டம், கலியாணத் திட்டம், தாலிக்குத் தங்கம் போன்ற திட்டங்களின் பெயரில் கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் போன்ற பல மாவட்டங்களிலிருந்து இளம் பெண்களை வேலைக்கு அழைத்துவந்து தங்க வைப்பது போன்று ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வேலை வாங்குகிறார்கள் என்றும், அவர்களுடைய வாக்குறுதிகள் பெரும்பாலும் மோசடிகளாக இருக்கின்றன என்றும், அந்தக் குறிப்பிட்ட காலம் முடிவதற்குள் தப்பித்து காலுடைந்து கையுடைந்து நோயாளிகள் ஆகிறவர்கள் பலர் என்றும் முன்னுரையில் கூறுகிறார்.
கோவிட் பெருந்தொற்றின்போது பல குழந்தைகள் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து மேற்கத்திய மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்டார்கள் என்கிற தகவலைத் தோழமை என்கிற தன்னார்வ நிறுவனத்தை நடத்தி வருகிற தேவநேயன் என்கிற நண்பர் என் பார்வைக்குக் கொண்டுவந்தார். பிறகு மாவட்ட ஆட்சியர்கள் மூலம் நடவடிக்கை எடுத்து அவர்களை விடுவித்தோம்.
சுமங்கலித் திட்ட தொழிற்சாலைகளில் கூலிச் சுரண்டல், பாலியல் சுரண்டல், மன அழுத்தம் போன்ற காரணங்களால் இதுவரை தமிழ்நாட்டில் 90 தற்கொலைகள் நடந்திருக்கின்றன என்று தெரிவிக்கிறார்.
நாவல் முத்துலட்சுமி என்கிற பெண் பணி தேடி வருகிற நிகழ்விலிருந்து தொடங்குகிறது. ஊடாக மேரி ஸ்டெல்லாவின் உழைக்கும் பெண்கள் ஆய்வு நோட்டிலிருந்து என்று பல்வேறு பெண்கள் படுகிற இன்னல்களைப் பதிவு செய்திருக்கிறார். வறுமை, பாதுகாப்பின்மை, சோற்றுக்கே வழியற்ற நிலைமை, கல்யாணக் கனவுகள் போன்ற காரணங்களினால் படிப்பிலிருந்து பாதியிலேயே நின்று கடினமான ஒரு வேலைக்கு வந்து மாதவிடாயின்போதுகூடப் பணியாற்ற வேண்டிய நிர்பந்தத்திற்குள்ளாகிற பெண்களைப் பற்றித்தான் இந்த நூல் பேசுகிறது. மரணம் இதுபோன்ற மக்களின் வாழ்க்கையில் சகஜமாகி விடுகிறது.
நாவலில் அழகான உவமைகளையும் கையாண்டிருக்கிறார். பஞ்சாலையின் பிரம்மாண்டத்தைப்பற்றிக் கூறுகிறபோது ‘அழகான நாற்பது வயதுப் பெண்களைக் கை, கால்களை அகற்றி வைத்துக்கொண்டு உட்கார வைத்த மாதிரி விசாலமான கட்டடம்‘ என்று விவரிக்கின்றார். பஞ்சாலையின் பிரம்மாண்டம் முத்துலட்சுமியை வசீகரிக்கிறது. வசீகரிக்கிற பல பொருட்கள் மாய வலைகள் என்பது மக்களுக்குத் தெரிவதில்லை.
நூற்பாலை இயந்திரத்தில் பட்டு ஒரு பெண்ணை அந்த இயந்திரம் சுருட்டிக்கொண்டு விட்டது. உடம்பு அடிபட்டு கசங்கிப்போன கரும்பாய் அந்தப் பெண் விழுந்து செத்துப்போனாள் என்கிற வரிகளும், ஆள் தெரியாத பிணங்கள் நகரத்தில் வீசியெறியப்பட்டன என்றும் படிக்கிறபோது மனம் குலுங்கித்தான் போகிறது. சில பெண்கள் தொடர்ந்து பணிசெய்ய முடியாமல் நேரம் காலமில்லாமல் பணிசெய்து, வயிற்று வலி வந்து பாதிக்கப்பட்டு, மிஷின் ஆயிலைக் குடித்து ஆயுளை முடித்துக்கொள்வதைக் காத்ரின் என்கிற பெண்ணின்மூலம் பயமுறுத்துகிறார். சுதந்தரம் சுத்தமாக இல்லை. கடிதம் எழுதினால்கூட அவர்கள் படித்துவிட்டுத்தான் அஞ்சல்காரரிடம் கொடுப்பார்கள் என்கிற சுதந்தரமற்ற தன்மை மனத்தை உலுக்குகிறது.
சிறைச்சாலைகளிலும், ராணுவ முகாம்களிலும் எழுதப்படுகிற கடிதங்கள் தணிக்கைக்குட்படுத்தப்படும். அங்கு மனத்தில் பட்டதையெல்லாம் எழுத முடியாது. சிறைச்சாலையிலிருப்பவர்களைப்பற்றி வார இதழ்களில் எழுதினால்கூட அவர்களுடைய விடுதலை பாதிக்கப்படும். அஞ்சல் அனுப்பக்கூட முடியாத நிலையைப் பார்க்கிறபோது ஷெகாவின் சிறுகதையொன்று நினைவுக்கு வருகிறது.
வட நாட்டிலிருந்து நிறையத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டுக்குள் பணிசெய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து இளைஞர்கள் உடல்ரீதியான பணிகளை வெளி மாநிலங்களில் செய்துகொண்டிருந்தார்கள். கல்வியின் காரணமாக நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அதே நேரத்தில் அது ஏற்படுத்தும் தாக்கத்தைப் புறந்தள்ளிவிட முடியாது. நாவலில் வட நாட்டு இளைஞர்கள் தமிழ்நாட்டுப் பெண்களைப்பற்றி இந்தியில் பேசி கலாய்ப்பதைப் பற்றியும், அது ஏற்படுத்துகிற வேதனையைப் பற்றியும் படிக்க முடிகிறது.
பெரும் கனவுகளோடு வந்த முத்துலட்சுமியின் இடது கை இயந்திரத்தில் சிக்கிக்கொள்கிறது. ஒரு சாண் நீளத்திற்குப் பறிபோய்விடுகிறது. ஐந்து விரல்களும் இல்லாமல் மொழுக்கென்று நீட்டிக்கொண்டிருக்கும் மரப்பட்டையைப்போல ஆகிவிட்டது, மணிக்கட்டுவரை வெட்டியெடுத்த பிறகே பிழைக்க முடிந்தது என்றும் சேலைத் தலைப்பால் அந்த வெட்டுப்பட்ட கையை எப்படி மூடிக்கொள்வது என்று கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஆசிரியர் சித்திரிக்கிற காட்சி எலும்பும் தோலுமாய் சாயம்போன உடையுடன் நிற்கிற ரத்தசோகை வந்த பரிதாபமான ஒரு பெண்ணை நம் கண்முன்னே நிறுத்துகிறது. கை போன பெண்ணுக்கு 25,000 ரூபாய் கொடுத்து பிரச்சினையை முடிக்கப் பார்க்கும் முதலாளித்துவத்தையும் அதன் குரூரத்தையும் பார்க்க முடிகிறது. ‘இவ்வளவு பெரிய உலகத்தில் எங்குப் போகவும் இடமில்லை‘ என்கிற கையறு நிலையை முத்துலட்சுமி உணர்கிறபோது நாமும் அதுபோல அங்கிருப்பதாகத் தோன்றுகிறது.
வறுமையைப்போல கொடுமை ஏதுமில்லை. இளமையில் மட்டுமல்ல, முதுமையிலும் வறுமை கொடியதுதான். கொஞ்சம் பணமிருந்தாலாவது வாரிசுகள் ஒட்டிக்கொண்டிருப்பார்கள். இல்லாவிட்டால் உதறிவிடுவார்கள்.
நாவல் முழுவதும் சமூக அவலங்கள் பூடகமாகவும், புடைப்பின்றியும் பேசப்படுகின்றன. காட்டுக்குட்டி என்றால் தகப்பன் பெயர் தெரியாது பிறக்கும் குழந்தைக்குச் சூட்டப்படும் அவச்சொல்லாம். கையை இழந்த முத்துலட்சுமிக்கு சுடிதாரை அணிந்துகொண்டு அமர்ந்திருப்பதுகூட சிரமமாக இருக்கிறது. இதுபோன்ற பாதுகாப்பற்ற சூழலில் கொஞ்சம் அன்பு காட்டுகிற ஸ்வர்னவேல் போன்ற இளைஞரிடம் தன்னை இழந்துவிடுகிற விபத்துகளும் இவர்கள் வாழ்க்கையில் சகஜம்.
எளிய மக்களின் உணவு எப்படியெல்லாம் சத்தற்றதாகவும், சுவையற்றதாகவும், ருசியான உணவின் சாயலாகவும் இருக்கிறது என்பதை ‘ஜனதா சிக்கன்‘ என்கிற உணவு வகையின் மூலம் சுட்டிக்காட்டுகிறார். ஒரியாக்காரர்கள் ஜனதா சிக்கனுக்காகக் காத்திருக்கிறார்கள். மிச்சமாகிற எலும்பில் கொஞ்சம் சதைத் துணுக்குகள் ஒட்டிக்கொண்டிருக்குமாம். அதைக் குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருக்கிறார்கள். வழக்கமான விலையைவிடக் குறைவு.
வெளியிலிருந்து வருகிற தொழிலாளர்கள் அதிகரித்துக்கொண்டே இருப்பதைத் திருப்பூர் போன்ற மாநகரங்களில் காண முடியும். ஒரு முறை திருப்பூர் தொடர்வண்டி நிலையத்தில் என்னுடைய பயணத்திற்காகக் காத்திருக்கிறபோது வட இந்தியா செல்லும் ஒரு தொடர்வண்டி வந்து நின்றது. அதில் ஆடுமாடுகள் அடைபடுவதைப்போலத் தொழிலாளர்கள் ஏறுவதைப் பார்த்தேன். அவ்வளவு நெடிய பயணத்தை, அப்படியொரு அசௌகரியத்தை அவர்கள் எப்படி மேற்கொள்வார்கள் என்கிற சிந்தனை எனக்கு ஏற்பட்டது. அன்று முழுவதும் தூங்குவதுகூடக் கடினமாக இருந்தது. இப்போது நூலாசிரியர் கூறுவதைப்போல உள்ளூர் ஜனக்கூட்டத்தில் வட நாட்டு இளைஞர்களின் முகங்கள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. அவர்கள் இல்லாவிட்டால் உணவகங்கள்கூட இயங்காது என்கிற நிலை தமிழ்நாடு முழுவதும் வந்துவிட்டது.
நூற்பாலை ஒன்றில் விடுதிக்காப்பாளர் பெண்களிடம் மாதவிடாய்பற்றி கூறிய கடுஞ்சொல் எவ்வளவு கொடூரமானது என்பதைப் படிக்கும்போது மனிதர்களை எவ்வளவு மட்டமாக நடத்துகிறார்கள் என்பது புரிகிறது. ‘உங்களுக்கெல்லாம் கர்ப்பப்பையை எடுத்துவிட்டால் எங்களுக்கெல்லாம் பல பிரச்சினைகள் குறைந்து விடும்‘ என்ற சுடுசொல்லை மிகச் சர்வ சாதாரணமாகக் கூறும் மனிதத்தன்மையற்ற நிலை சிந்திக்கத்தக்கது. உயிருள்ள மனிதர்களையும் உற்பத்திப்பொருட்களாகக் கருதி அவர்கள் உழைப்பின் மிகுதியைச் செல்வமாக்கிக்கொள்கிற மனப்பான்மைதான் இது.
இதற்கிடையில் சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுப்பதையும் சுட்டிக்காட்டுகிறார் நூலாசிரியர். விபத்தில் சிக்கிய பெண்களுக்கு அதிக இழப்பீடு பெற்றுத்தர அவை முயற்சி செய்கின்றன.
சுமங்கலித் திட்டத்தில் பணம் சேர்த்து, தங்கம் வாங்கி, திருமணம் செய்துகொண்ட பெண்களைப் பார்த்து அதே குடும்பத்திலிருக்கும் தங்கைகளுக்கும் ஆசை வந்துவிடுவதுண்டு. ஆணவக் கொலைகளைப் பற்றியும் போகிற போக்கில் நூலில் அவர் பதிவுசெய்திருக்கிறார்.
அமரக்கூட இருக்கை இல்லாமல் நின்றுகொண்டே பார்க்கிற உத்தியோகத்தில் பல பெண்களுக்குக் கால்வலி வருவதையும், அவர்கள் துடிப்பதையும் வாசிக்கும்போது செயல்படுத்தப்படாத தொழிலாளர் சட்டங்கள் நினைவுக்கு வந்தன.
. முறிவு என்கிற இந்த நாவலும் சிறந்த நாவலுக்கான இலங்கை நாட்டுப் பரிசு பெற்றதுதான். பின்நவீனத்துவப்பாணி இருந்தாலும் கதையோட்டம் வாசகர்களை அவர்களும் தங்கள் பங்குக்குக் காட்சிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. முறிவு என்பது கனவு முறிவையும் குறிக்கும், கை முறிவையும் குறிக்கும்….
( முறிவு என்சிபிஎச் பதிப்பகம் வெளியீடு.. ரூ130 )
Iraianbu
11/11/25
No comments:
Post a Comment